Nov 22, 2013

தலைப்பில்லை


இன்று காலை சரியாக ஒன்பது மணியில் இருந்து கரண்ட் கட் , நான் வீட்டில் எப்போதும் உள்ளே உட்கார்ந்து தான் சாப்பிடுவேன் , கரண்ட் கட் என்பதால் வீட்டின் வரண்டாவில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தேன் ..அப்போது உங்கள் பாஷையில் பரதேசி , பிச்சைகாரன் வந்திருந்தார் , நான் அவரை என்பது வயது மதிக்கத்தக்க முதியவர் என்று அழைக்கவே விரும்புகிறேன் , வீட்டு வாசலில் நின்று கொண்டு "சாமீ .." என்று ஒரு திருவோடை நீட்டினார் ...எங்க அம்மா வெளியில் சென்று இருந்தார்கள் ..சட்டுன்னு எழுந்து போய் லேசாக கைகழுவி விட்டு அவருக்கு என் பையில் இருந்த மூன்று ரூபாய் எடுத்துப்போட்டேன் , அவரால் நிற்க கூட முடியவில்லை கையில் ஒரு கம்பும் ,காவி வெட்டியும் , வெண்மை தாடியும் கிட்டத்தட்ட ஒரு யோகி போலவே எனக்கு காட்சி அளித்தார் , முருகா முருகா என்று கொஞ்சம் முனங்கி கொண்டே இருந்தார் ,,,"அய்யா சாப்பிடீங்களா ?" என்றேன் ... இல்ல தம்பி என்று என்னை ஏக்கமாக பார்த்தார் .."வாங்க சாப்பிடலாம்" என்று அவருக்கும் ஒரு தட்டில் சோறு போட்டு வந்து கொடுத்து அவர் அருகிலே நானும் உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தேன் ...

இனிவருவது நாங்கள் பேசிக்கொண்டது
"எந்த ஊர்யா நீங்க "
"குமாரத்துல பிறந்தேன் தம்பி"

வேறு எதுவும் பேச வில்லை ...மின்னல் போல சாப்பிட்டு " போயிட்டு வரேன் தம்பி " (உறவினர் கூட இதை இப்போது சொல்வது இல்லை ) என்று சென்று விட்டார்

..எனக்கு இப்போது
SALES PERSONS ARE NOT ALLOWED
என்ற அப்பார்ட்மெண்ட்கள் கண்ணில் தோன்றி மறைகின்றன
Nov 20, 2013

கொள்கைகளை மாற்ற வேண்டும்


16ஆம் நூற்றாண்டை முக்கியமான REANISSANCE  CENTURY என்பார்கள் அதாவது மறுமலர்ச்சிக்கான சிந்தனைகள் அப்போது தான் துளிர்விட துவங்கியது , அதற்கு முன்னும் சிறு சிறு அளவில் மறுமலர்ச்சி இருந்து கொண்டு தான் இருந்தது ,ஆனால் 16ஆம் நூற்றாண்டிற்கு பிறகு ஒரு மாபெரும் மனபரிணாமம் வளர்ச்சி அடைந்தது , மனிதன் சிந்திக்க ஆரம்பித்து லட்ச ஆண்டுகள் ஆகியிருக்கலாம் , அவன் பேச,எழுத ஆரம்பித்து இருபதாயிரம் ஆண்டுகட்கு மேல் ஆகியிருக்கலாம் , ஆனால் மனித சமுதாயத்தின் மாற்று பாதை 16ஆம் நூற்றாண்டில் இருந்து தான் தொடங்கியது , அதன் பிறகு வேக வேகமாக சிந்தனை மாற்றமும் , கூடவே சமூக கட்டமைப்பு மாற்றமும் நிகழ்ந்து வந்தது

மன்னன் ஒரு சொல் சொன்னால் மறுபேச்சே இல்லை என்ற காலம் மாறி மன்னனாவது மயிராவது என மக்கள் அனைவரும் சிந்திக்க ஆரம்பித்தனர் .மன்னனே இந்த சிந்தனை வளையத்தில் சிக்க ஆரம்பித்தான் என்பது தான் வேடிக்கை

1900களில்  நம்ம கொள்ளுதாத்தா பாட்டிக்கு சீனியர் எல்லாம் விடுதலை வாங்கியே தீர வேண்டும் என்ற கொள்கையில் விடுதலை வாங்கினர் . என் பார்வையில் வரலாறு சொல்லும் முப்பதில் இருந்து நாற்பது தலைவர்கள் தான் ஏதோ ஒரு வழியில் இந்தியர்களின் சிந்தனையை மாற்றி அமைக்க பெரும் பாடு பட்டனர்

ஒரு பக்கம் ஆயுதம் ஏந்தி ரத்தம் சிந்தி போராடுவோம் என ஒரு குழு கிளம்பியது , மறுபக்கம் கத்தியின்றி ரத்தமின்றி என்ற வகையில் போராடியது , வெள்ளைக்காரனுக்கே அலுத்துப்போகும் அளவு அவனை தொந்தரவு செய்து 1947ல் நம் நாட்டை விட்டு வெளியேற்றியாயிற்று

அடுத்த மூன்று வருடங்கள் குட்டி குட்டி  நாடுகளாக ஆளுக்கு ஒரு நாட்டாமை செய்யலாம் என்று நினைத்த சிறு வண்டுகளை எல்லாம் நசுக்கி பெரியவர் தான் நாட்டாமை என்று கூறி இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டாச்சு

அப்படியே நம்ம மாநிலதுக்குல வந்தா சுயமரியாதை , சாதி ஒழிப்பு , மத ஒழிப்பு , இந்தி ஒழிப்பு என ஏகப்பட்டதை சுதந்திரத்திற்கு பின் ஒழிக்க வேண்டிய கட்டத்தில் தமிழர்கள் எனப்படும் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது , அந்த சிந்தனையை கையில் எடுத்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு வண்ணம் கொடுத்து கடைசியில் சாக்கடையாக்கியே விட்டனர்

தமிழ்நாட்டில் பார்த்தால் அடிப்படை சிந்தனையாக "தமிழன் , இந்தியன்" என்ற ரீதியில் நாம் கற்றுக்கொடுப்பட்டோம் , அதற்குமுன் பலர் "ஊர்க்காரன் , தெருக்காரன் ,ஜாதிக்காரன்" என்பதையும் சேர்த்து சிந்திக்க ஆரம்பித்தனர்

தமிழனை பொறுத்தவரை பிரச்னையே இல்லையென்றாலும் அதையும் ஒரு பிரச்சனையாக பேச வேண்டிய சிந்தனைக்கு அவன் மூளைச்சலவை செய்யப்பட்டு உள்ளான் .உதாரணமாக "யார் தமிழன் ?" என்பதையே மிகப்பெரிய தமிழர் பிரச்சனையாக பேசுவான்

என்னைக்கேட்டால் நூறு வருண்டளுக்கு பிறகு ஒரு கொள்கை நல்லதே செய்தாலும் அதை மாற்றி விட வேண்டும் , அதற்காக வாய் வழியாக உணவு உண்பதை மாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை , அடிப்படைகள் அப்படியே இருக்கட்டும் ,(எது அடிப்படை என்ற கொள்கையும் சில நேரம் மாற்றப்பட வேண்டும்) , வெளிப்புறத்தை சிறுக சிறுக மாற்றியே ஆக வேண்டும் அல்லது மாறி விடும் 

இந்த பிரபஞ்சமும் இதற்கடுத்த பிரபஞ்சமும்


இந்த பிரபஞ்சமும் இதற்கடுத்த பிரபஞ்சமும்
காலமே தோன்றாத ஒரு காலமுண்டு
காலம் தோன்றவில்லை ஞாலம் இருக்குமோ?
கடவுள் மட்டும் காதலிக்க நேர்ந்தது

படைப்பிற்கு பத்து நொடிக்கு முன்னால்
காலமில்லை , நம் மூளைக்காக காலமுண்டு !
என்னையே தர்சிக்கும் ஒற்றை உணர்தலுக்கு
தன்னையே படைப்பாக மாற்றியது படைப்பு

இதுவும் ,அதுவும் ,எதுவும் கடவுளாகலாம்
தகுதியுண்டு ! தனக்குள் உண்டு !
வெளிச்சத்தின் நிழலுக்குள்ளும் ஓர் வெளிச்சமுண்டு

அன்பு சிவமானாலும் , சிவம் அன்பானாலும்
நீ அன்பை மட்டும் பாரு !
சிவம் தன் வேலையை தானே பார்க்கும் 
Nov 19, 2013

பேஸ்புக் தளத்தில் புது வசதி அறிமுகம்


இணைய உலகில் மிகப்பிரபலமான சமூக வலைத்தளம் என்றால் அது FACEBOOK தான் . இன்றைய காலகட்டதில் மக்களின் வாழ்வியலோடு கலந்து விட்ட பேஸ்புக் தளம் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது

பேஸ்புக் மூலம் சாட்டிங் எனப்படும் நண்பர்களோடு பேசும் வசதி இருக்கிறது அதன் மூலம் நாம் வீடியோ சாட்டிங் கூட பண்ணும் அளவு வசதி எப்போதோ வந்து விட்டது , மேலும் புகைப்படம் அனுப்பும் வசதி என பல்வேறு புதுமைகளை புகுத்தி வந்தது பேஸ்புக் தளம்

இப்போது புதியதாக வந்திருப்பது நாம்  சாட் (CHAT) செய்யும் நபர் செல்போன் மூலம் நம்மிடம் CHAT செய்கிறாரா இல்லை கணினி மூலம் CHAT செய்கிறாரா என்று எளிமையாக தெரிந்துகொள்ளும் வகையில் WEB OR MOBILE வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது 


படத்தில் உள்ளது போல நம் நண்பர்கள் கணினி மூலம் சாட் செய்கிறாரா இல்லை மொபைல் மூலம் பேசுகிறாரா என்பதை எளிமையாக அறிய முடியும்
இனிமே "மச்சி மொபைல்ல தான் பேஸ்புக் யூஸ் பண்றேன் சாட்டிங் நெட்வொர்க் PROBLEM" என்று நம்ம பசங்க பொய் சொல்ல முடியாது


Nov 6, 2013

ஆங்கிலத்தை தமிழில் எழுத வேண்டும்


தமிழை ஆங்கில எழுத்துருவில் எழுதலாம் என்று புரட்சி எழுத்தாளர் எழுதிருப்பதாக அறிகிறேன் அதாவது வணக்கம் என்பதை ஆங்கில எழுத்துருவில் Vanakkam என்று எழுதலாம் , அப்போது தான் தமிழ் வளரும் என்று நம்ம அறிஞர் கண்டு பிடித்து கூறியுள்ளார் , இணையம் தொடங்கிய காலத்தில் நாம் எல்லாம் அப்படி தான் எழுதிக்கொண்டு இருந்தோம் , UNICODE (ஒருங்குறி) என்ற ஒன்று வரும் முன் நாம் அவர் சொன்னதையே செய்துகொண்டு இருந்தோம்  , அதாவது சாப்பிட்டியா ? என்பதை Saptiya என்று எழுதுவோம் , அப்போது அதற்கு வசதி இல்லை எனவே நாம் ஆங்கில எழுத்துருவை  அதற்கு பயன்படுத்தினோம். இங்கே எழுத்துரு என்பது FONT என்ற அர்த்தத்தில் மட்டும் எடுத்துக்கொள்ள கூடாது  உதாரணமாக கணினியில் தமிழிற்கு ஆயிரம் எழுத்துருக்கள் இருக்கிறது , அடிப்படையில் சின்ன வடிவ மாற்றமே இருக்கும் ஆனால் அவை எல்லாம் தமிழ் தான்


ஆதிகாலத்தில் இருந்து தமிழின் எழுத்து வடிவம் காலத்திற்கு ஏற்றார் போல மாறித்தான் வந்திருக்கிறது , அதற்காக தமிழிற்கு என்று ஒரு சிறப்பு வடிவ முறை இருக்கும் போது நாம் ஏன் பிற மொழி வடிவத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது , தமிழ் இப்படி எத்தனையோ கோக்கு மாக்கு சிந்தனைகளை தாண்டித்தான் உயிர் வாழ்ந்து வந்துள்ளது

உண்மையில் தற்கால தமிழர்கள் ஆங்கிலத்தையே தமிழில் தான் எழுதுகிறார்கள் உதாரணமாக" ஃபக் ஆப் " ..எனவே இனிமேல் எல்லோரும் ஆங்கிலத்தையும் சேர்த்து தமிழில் தான் எழுத வேண்டும் ..ஏன் என்றால் இங்கு இருக்கும் தமிழ் குழந்தைகள் எல்லாம் ஆங்கிலத்தில் எழுத மிகுந்த சிரமப்படுகிறார்கள் , அவர்களுக்கு ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் வாசிப்பதை விட தமிழில் வாசிப்பதே எளிமையாக உள்ளது இதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலைகொள்வது அடிப்படைவாதம் மட்டுமே.இது தெரிந்து தான் வெள்ளைக்காரனே தமிழ் எழுத்துகளில்  தட்டச்சு செய்ய தமிழர்களை வேலை வாங்கி ஒரு மென்பொருள் உருவாக்குகிறான்

ஆங்கிலம் என்பது நம் குழந்தைகளின் நரம்புகளில் கலக்கவேண்டும் என்பதால் அவர்களுக்கு தமிழிலே ஆங்கிலத்தை  சொல்லிக்கொடுக்கலாம்


எழுத்து தான் ஒரு மொழியின் அடிப்படை என்பதை சற்று கூட உணராத ஒருவரை தான் இந்த உலகம் அதிமேதாவி என்று கொண்டாடியது , அதற்காக வருத்தம் ஏதும் படத்தேவையில்லை தமிழர்கள் உங்களையும் மன்னித்து நாளைக்கே மறந்தும் விடுவார்கள்